Sunday 2 December 2012

பாதாள அஞ்சனக்கல்லில் செய்யப்பட்ட கிருஷ்ணர்!

குருவாயூர் திருக்கோயிலில் தரிசனம் தரும் மூலவர் ஸ்ரீகுருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச் சிறப்பு கொண்டதாகும். மிகவும் புனிதமானது எனக் கருதப்படும் பாதாள அஞ்சனம் எனும் கல்லில் மூலவர் விக்கிரகம் வடிக்கப்பட்டுள்ளது.

இந்த விக்கிரகத்தை ஒரு காலத்தில் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் வைத்து வழிபட்டு வந்தார். அதன் பிறகு அந்த விக்கிரகத்தை பிரம்மதேவனிடம் அளித்தார். பிறகு பிரம்மனிடம் இருந்து கைமாறி காசியாபா பிரஜாபதி, வசுதேவர் ஆகியோரிடம் போனது. கடைசியில் வசுதேவரிடம் இருந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே இந்த விக்கிரகம் வந்து சேர்ந்தது. துவாரகையில் தன் மாளிகையில் இதை வைத்து வணங்கி வந்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

கிருஷ்ண அவதாரம் பூர்த்தியாக வேண்டிய வேளை வந்தது. அதற்கு முன்னதாகத் தன் பக்தரான உத்தவரிடம், ‘இன்னும் ஏழு நாட்களில் துவாரகையைக் கடல் கொள்ள இருக்கிறது. அந்த வெள்ளத்தில் இந்தக் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும். அதை குரு பகவான் உதவியுடன் பக்தர்கள் வணங்கத்தக்க புனிதமான ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்' என்றார் கிருஷ்ண பகவான்.

அடுத்த ஒரு சில தினங்களில், பகவானின் வாக்குப்படி பெரிய பிரளயம் ஒன்று துவாரகையைத் தாக்கியது. அந்த வெள்ளத்தில் மிதந்து வந்த விக்கிரகம் ஸ்ரீகிருஷ்ணரின் வாக்குப்படி குரு பகவானிடம் போய்ச் சேர்ந்தது. இதை பிரதிஷ்டை செய்வதற்காக குருவும் அவரது முதன்மை சிஷ்யனான வாயுவும் சேர்ந்து ஒரு நல்ல இடத்தைத் தேடி அலைந்தார்கள்.

இறுதியில் அவர்கள் கேரள தேசத்தை அடைந்தார்கள். அங்கே பரசுராமரை சந்தித்தனர். இந்த விக்கிரகம் பிரதிஷ்டை ஆக வேண்டிய இடம் இதுதான் என்று பரசுராமரே இருவரையும் கூட்டிக் கொண்டு போய் ஓரிடத்தைக் காண்பித்தார். பச்சைப்பசேல் என்று அழகாகக் காட்சி தரும் அந்த இடத்தின் அருகே சிவபெருமான் பன்னெடுங் காலமாக தவம் இருந்து வந்தார்.

அந்த இடத்தில் விக்கிரகம் பிரதிஷ்டை ஆனது. குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் இந்த க்ஷேத்திரம் பின்னாளில் ‘குருவாயூர்' ஆயிற்று. தென் துவாரகை எனவும் போற்றப்படுகிறது.

சென்று பார்த்து அவர் அருள் பெற்று வாருங்களேன்!

Saturday 24 November 2012

சிக்கலாருக்கே வியர்க்கிறதாம்!


சிக்கல்! முருகர்  தன் தாயிடம் வேல் வாங்கின இடம்.  இங்கு உற்சவரும்  மூலவரும்  ஒருவரே.  மற்ற கோயில்களில் உற்சவர்  சிலை கால்லால் உருவாக்கப்பட்டிருக்கும்.  உற்சவரை உலோகத்தில் செய்து வைத்திருப்பார்கள்.  இங்கு மூலவரே உலாவருகிறார்.  ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மகா கந்த சஷ்டி அன்று உலாவரும் முருகனுக்கு உடல் எல்லாம் வியர்க்கும்.  பூசாரி அவர் முகத்தை துடைத்து துடைத்தே தளர்ந்து விடுவார்.

சென்று பார்த்து அவர் அருள் பெறுங்களேன்!

Wednesday 21 November 2012

நான்கு கரங்களுடன் ராமர்!


பொன்பதர் கூடம் ராமர் கோயில்.  செங்கல்பட்டிலிருந்து கிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமம்.   உறையும் ராமபிரான் நான்கு கரங்களுடன் மற்ற கோவில்களிலிருந்து வித்யாசமாக உள்ளார்.  தந்தை தசரதன் ராமபிரானை பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டுமென உத்தரவிட்டவுடன் அதை புன்னகையுடன் சிரம் மேற்கொண்டார்.  இதை கண்ட சீதைக்கு, இப்படிப்பட்ட கட்டளையை ராமனால் எப்படி புன் முறுவலுடன் ஏற்றுகொள்ள முடிகிறது என்று எண்ணினாள்.  நேரம் வந்தபோது ராமர் தான்  என்பதை நான்கு கரங்களுடன் இரு கரத்தில் சங்கு சகரத்துடன் சீதைக்கு காட்சி  அளித்து  தானே நாராயணன் என்பதை உணர்த்தினார்.  அது  போல்  கண்டேன் சீதையை என்று அனுமன் கூறிய  போது, அவருக்கும் நான்கு கரத்துடன் காட்ச்சியளித்தாராம்.

சென்று பார்த்து அருள் பெற்று வாருங்களேன்!

Tuesday 13 November 2012

பகவான் கிருஷ்ணரின் சமாதி!


பூரி ஜகன்னாதர் ஆலயம்!  ரத உற்சவத்துக்கு பெயர் பெற்ற இடம்.  ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் அங்கு உண்டு.  அந்த கோவிலின் கருவறை தான் "கிருஷ்ணரின்" சமாதி.  ஆம்!  அவதார முடிவில், உடலை விட்டு நாராயணர் சென்ற பின்னர், மீதி இருந்த யாதவ குலத்தினர், அவர் உடலுக்கு மரியாதை செய்து, கங்கையில் விட்டனர்.  கிருஷ்ணரோ இயற்கையான "வாசி யோகி".  ஒரு வாசி யோகியின் உடலுக்கு அழிவு கிடையாது.  அது எப்போதும் நல்ல அதம சக்தியை பரப்பிக்கொண்டிருக்கும்.  நடப்பவைகளை ஒருவர் கண்டு நின்றார்.  அனைவரும் சென்ற பின், கங்கை நதியிலிருந்து உடலை மீட்டு அவருக்கு ஒரு சமாதி கட்டி கோவிலாக்கினார்கருவறையை "சங்கு" ரூபத்தில் அமைத்தார்.  ஆம்! அவர் போகர் சித்தர்.  

போய் தரிசனம் செய்யுங்கள்! அப்போது புரியும்!

Thursday 8 November 2012

வில்வ பூசை உணர்த்தும் தத்துவம்!


"விஸ்வநாதர் கோயில்"காசி!

இந்தக் கோயிலில் சாயங்கால பூசையின் போது நூற்றி எட்டு "வில்வ" இலைகளால். தீபாராதனைக்கு முன்பு அர்ச்சனை செய்கிறார்கள்.  இதில் விசேஷம் என்ன வென்றால், அந்த நூற்றி எட்டு "வில்வ" இலைகளிலும் சந்தனத்தால் "ராமா" என்று எழுதி பின்னர் அர்ச்சனை செய்கிறார்கள்.  அரியும் சிவனும் ஒன்று என்று சொல்லாமல் சொல்லி உணர்த்தும் செயல்.

போய் பார்த்து அவர் அருள் பெற்று வாருங்களேன்!

Saturday 20 October 2012

நரசிம்மர் உலாவரும் தலம்!



"அஹோபிலம்", பகவன் நாராயணன் ஹிரண்ய கசிபுவை முக்தியடயச்செய்ய அவதாரம் எடுத்த தலம்.  தேவர்கள் பெருமாளை காணும்பொழுது "ஹிரண்ய கசிபுவின்" வதம் எப்படி நடந்தது என்று கேட்க்க, பெருமாளும் நாடகத்தை நடத்திக்காட்டி அருளும் தலம்.  இன்றும் நரசிம்மர் அரூபமாகவும், ரூபமாகவும் வலம் வரும் தலம்.  மிகவே அமானுஷ்யமான புண்ய ஸ்தலம்.  நரசிம்மருக்கு ஒன்பது கோயில்கள் உள்ளது.  மலைமேல் தனியாக செல்லக்கூடாது.  கொடிய மிருகங்கள் வாழும் இடம்.  உண்மையான பக்தி இன்றி ஒரு போதும் இந்த தலத்தில் கால் பதிக்காதீர்கள்!  தொலைத்துவிடுவார்.

சென்று அவர் அருள் பெறுங்களேன்.

Sunday 2 September 2012

கக்கிய பால் அரு மருந்தாகிறது!


க்ரவுஞ்சகிரி, செந்தூருக்கு அருகே இருபது கிலோமீட்டர் தூரத்தில் சுப்பிரமணியர் கோவில் கொண்ட மலை வாச ஸ்தலம்.  பெங்களூரிலிருந்து பெல்லாரி செல்லும் பாதையில் ஹோஸ்பெட் என்கிற ரயில் தடத்தில் இறங்கி செல்ல வேண்டும்.  முருகர் வள்ளி தேவயானை இன்றி தனித்து நிற்கும் இடம்.  அம்பாளுக்கு தனி சந்நிதி.  மிக தனிமையான இடம்.  கனத்த அமைதியும், குளிர்ச்சியும் சூழ்ந்த இயற்கை பச்சை சூழ்ந்த மலை.

அதிசயம் - முருகர் காலடியில் ராமரும் லக்ஷ்மணரும் அமர்ந்திருக்கிறார்கள்.  சீதையை மீட்டவுடன் அவர்கள் இருவரும் இங்கு வந்து முருகருக்கு பூசை செய்ததாக சொல்கிறார்கள்.  ஒருகாலம் வரை பெண்களுக்கு இங்கு அனுமதி கிடையாதாம்.  அதனால், ராமர் வந்த காலத்தில் சீதையை கோயிலுக்கு வெளியே இருக்க சொல்லிவிட்டு அனுமனை காவலுக்கு வைத்துவிட்டு உள்ளே வந்தார்களாம்.  இன்றும் முருகருக்கு நடக்கிற பூசைகள், ராமர் லக்ஷ்மணருக்கு தான் சென்று செருகிரதாம்.

முருகருக்கும் பார்வதி அம்மைக்கும் வாக்கு வாதம் வரவே, பார்வதி தேவி முருகனிடம், தான் கொடுத்த தாய் பால் தானே முருகனை வளர்த்தது என்று கேட்க, அதுவும் எனக்கு வேண்டாம் என்று அத்தனையையும் கக்கி விடுவதாக ஐதீகம்.  அது மலையில் உறையவே, வெள்ளை கல்லாக மாறுகிறது.  இந்த வெள்ளை கல், பால் நிறத்தில், தொட்டால் நல்ல நறுமண விபூதி போல் உள்ளது. முருகர் சன்னதி முன் ஒரு தட்டில் வைத்திருக்கிறார்கள்.  கேட்டால், எடுத்துக்கொள்ள சொல்கிறார்கள்.  அரு மருந்தாக பயன் படுகிறது.  மிக அபூர்வமாக இருக்கிறது.

ஒரு முறை சென்று தரிசனம் பெற்று, அதையும் பெற்றுக்கொள்ளுங்களேன்!

Saturday 1 September 2012

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்தி வரதர்!


காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ள அத்தியூர்.  அத்தி மரத்தில் செய்யப்பட்ட வரதர் கோவில் குளத்து நீரில் பாதுகாக்கப்பட்டு வருகிறார். கல்விக்ரகம் ஏற்பாடு செய்த பின்னர் அத்திவரதர் குளத்துள் இருக்கிறார். நாற்பதாண்டுகட்கு ஒருமுறை அத்தி வரதரை வெளிக்கொணர்ந்து அலங்காரங்கள் செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு ஒரு மண்டலம் வைத்து வழிபாடுகள் செய்து பின் குளத்தில் மத்தியில் உள்ள நீராழி மண்டபம் இருப்பதால் அங்கு தெப்போற்சவம் சிறப்புறச் செய்து தாயாரும் பெருமாளும் தெப்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். கோவிலுக்கு வெளியே தாயார் வருவதில்லை.

Friday 24 August 2012

குளத்தில் மண் கலயத்தில் விபூதி தோன்றுகிறது!


ஈரோடு ஜில்லாவில், காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது. இது இந்த காலத்திலும் நடக்கும் ஒரு அதிசயம்.  அந்த குளத்தை சிவபெருமான் தன் விரல் நகத்தால் மண்ணில் கிழித்து உருவாக்கினாராம்.  மிக உயரமான கல் விளக்கு இந்த கோவிலில் காணப்படுகிறது.

சென்று அருள் பெருங்களேன்.

உலகிலேயே மிகப்பெரிய பாதரச லிங்கம் !


சித்தநாத் ஆஸ்ரமத்தில் உலகிலேயே மிகப்பெரிய பாதரச லிங்கம் நிறுவப்பட்டுள்ளது.  பாதரசத்தை சுத்தப்படுத்தி கேட்டுவது என்பது மிகப் பெரிய விஷயம். உண்மையில் இது சித்தர்களுக்கு கை வந்த கலை.  சித்த மார்கத்தில் செல்பவர்களுக்கு, இந்த லிங்க தரிசனம், அதன் அருகாமை மிக நல்ல பலன்களை தருகிறது.  இந்த ஆஸ்ரமம் புனே, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.

யோக நிலையில் உயர்பவர்களே, போய் உணர்ந்து பாருங்கள்.

நெய் உறைந்து மறைந்த லிங்கம்!


எத்தனையோ தலை முறையாக, வருடங்களாக ஒரு சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்து வர, அந்த நெய்யே உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது.  உறைந்த நெய்யின் உயரமே ஒரு நான்கு அடி உயரம் இருக்கும்.  எத்தனையோ விளக்குகள் ஏற்றி வைத்த சூட்டிலும், வெயில் காலத்தின் சூட்டிலும் அந்த உறைந்த நெய்யானது உருகுவதில்லை.  இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது.  வடக்கும்நாதர் சிவன் கோவில், திருச்சூர், கேரளா மாநிலம்.  உறைந்த நெய்யின் சிறு அம்சத்தை பிரசாதமாக வாங்கி உண்ண அது எந்தவித வியாதியையும் மாற்றுகிற அரு மருந்தாக திகழ்கிறது.

நம்பிக்கையுடன் போய் பாருங்களேன்! 

கொடி மர நமஸ்கார பூசை ஒரு திருப்புமுனை!


திருசெந்தூரில் தினமும் காலை நடை திறப்பதற்கு முன் முதலில் கொடிமரத்துக்கு தான் பூசை.  பின்னர் தான் மூலவர் நடை திறந்து நிர்மால்யம், அபிஷேகம் எல்லாம்.

தினமும் காலை ஐந்து மணிக்கு கொடிமர பூஜையின் பொது, இரண்டு பேர் மந்திரத்தை பகிர்ந்து சொல்ல அவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும் , நமஸ்காரம் செய்வார்கள்.  அனுமதி இலவசம்.  வாழ்க்கையில் நிச்சயமாக திருப்பம் உண்டாகும்.

போய் பாருங்களேன்! 

பெருமாளே சிவனாக மாறும் விந்தை!

திருப்பதி என்று கேட்டவுடன் பெருமாளும், வைஷ்ணவத்தின் உச்ச ஸ்தலம் என்பதும் எல்லோர் எண்ணத்திலும் உதிக்கும்.  அங்கு பெருமாள் வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?  அந்த நாள் வெள்ளிக்கிழமை.  ஆம்! வியாழனன்று இரவு பெருமாளின் அலங்காரத்தை கலைத்து, அவருக்கு எளிய வஸ்திரத்தை சார்த்தி, மந்திர ரூபத்தில் அவரை "சங்கர நாராயணர்" ஆகா மாற்றுகிறார்கள்.  அவருக்கு வில்வ மாலை அணிவிக்கபடுகிறது. பின்னர் அவருக்கு ஒரு தட்டில் விபூதி மேல் கற்பூரம் வைத்து தீபாராதனை காட்டப்படுகிறது.  பெருமாள் அந்த இடத்தை விட்டு இறங்கி அலமேலுமங்காபுரத்தில் தாயாரை பார்க்க செல்வதாக ஐதீகம்.  வெள்ளி கிழமை அன்று பெருமாளின் தரிசனத்துக்கு, அலமேலுமங்காபுரத்தில் கூட்டம் அலை மோதும்.  மறுபடியும் வெள்ளிக்கிழமை இரவு திருப்பதியில் சுவாமியை மந்திர ரூபத்தில் ஆவாகனம் செய்து, நாராயணனாக மாற்றுகிறார்கள்.  தாயாரை பார்த்து வந்து சந்தோஷத்தில் இருக்கும் பெருமாளிடம் ஆசிர்வாதம் வாங்க சனிக்கிழமை அத்தனை கூட்டம் சேர காரணம், அன்று என்ன வேண்டுதல் வைத்தாலும் உடனே பாஸ் மார்க் தான்.

வியாழன் அன்று  போய் பாருங்களேன் .

Wednesday 22 August 2012

நெய் அபிஷேகம் செய்தால் வெண்ணையாக மாற்றி தரும் லிங்கம்!


பெங்களூரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடம் சிவகங்கா என்கிற கிராமம். அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ளார். ஐந்து அடி உயர, நல்ல பருமனான லிங்கம்.சுவாமியின் மிக அருகிலிருந்து தரிசனம் செய்யலாம்.  கவிகங்காதீஸ்வரர் என்று இறைவன் பெயர்.

ஆச்சரியம் என்னவென்றால், அந்த கோவிலில் நெய் அபிஷேகத்துக்கு விற்கிறார்கள்.  அதை வாங்கி, அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால், அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி  தருவார். அந்த நெய் வெண்ணையாக மாறி இருக்கும். இன்றைய அறிவு ஜீவிகளால் இதற்கு சரியான விளக்கம் தர முடியுமா?

ஒருமுறை போய் அனுபவித்து பாருங்கள்.