Saturday 1 June 2013

ஈர மணல் காய்ந்து விபூதியாகும்!

சுருளி மலை வேலப்பர் கோயில், தேனீ. இத்தலத்தில் முருகன் குகைக்கோயிலில் அருள்பாலிக்கிறார். விபூதிக் குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிப்பது, 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறை போல மாறுவது, பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசம் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது.

Sunday 12 May 2013

கைப்பிடி அரிசியில் கட்டப்பட்ட கோவில்!

ஒவ்வொரு குடும்பத்திலும் தினமும் சமையல் செய்யும்போது, ஒரு கைப்பிடியளவு அரிசியை ஒரு கலயத்தில் போட்டுவிட வேண்டும். வாரம் ஒருமுறை அது சேகரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அந்தத்தொகை பல நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தப்படும். அப்படி பிடியரிசி மகிமையினால் கட்டப்பட்டதுதான் விருதுநகரிலுள்ள புகழ்பெற்ற வெயில் உகந்த அம்மன் கோவில். இந்தக் கோவில் 1838 இல் கட்டப்பட்டது.

முருகனுக்கு சுருட்டு நைவேத்தியம் !

திருச்சி - மதுரை சாலையில் அமைந்துள்ள ஊர் விராலி மலை. இங்குள்ள முருகன் கோவிலில் வேறு எந்த முருகன் கோவிலிலும் இல்லாத விஷயமாக, சுருட்டு நைவேத்தியம் முருகனுக்கு படைக்கப்படுகிறது. 

இப்படியும் ஒரு வேண்டுதல்!

கேரள மாநிலம், திருச்சூர் - எர்ணாகுளம் பாதையிலுள்ள ஊர் 'திருக்கூர்'. இங்குள்ள சிவன் கோவிலில் ஆஸ்துமா போன்ற மூச்சுக் கோளாறு உள்ளவர்கள் நோய் குணமாக தாம்புக்கயிறு துலாபாரம் கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார்கள். இப்படி வழங்கப்பட்ட தாம்புக்கயிறுகள் கோவில் மண்டபத்தில் கட்டி தொங்க விடப்படுகின்றன.

பில்லி சூன்யம் விலக்கும் ஏடகநாதர்!

மதுரையிலிருந்து துவரிமான், தேனூர் வழியே சோழவந்தான் பேருந்து பாதையில் 18 கி.மீ. தொலைவில், திருவேடகம் இருக்கிறது. இறைவன் ஏடகநாதர், மந்திர மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். அனைத்து பில்லி, சூன்யங்களும் இவ்வாலய மூர்த்தியைத் தரிசித்ததும் நீங்கி விடுகின்றன. இங்கே எழுந்த ருளி அருள்பாலிக்கும் அம்பாள் ஏலவார் குழலி, பெண்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நீக்கித் தருகிறாள். இங்குள்ள ஸ்தல விருட்சமான வி ல்வ மரம் சக்தி படைத்தது. இத்தலத்தில் பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்து நீரையே இறைவனுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்துகிறார்கள். 

ஆப்பனூர் போய் தரிசித்தால் வாத நோய் விலகும்!

மதுரை நகருக்குள் செல்லூரில் இருக்கிறது, திரு ஆப்பனூர் கோயில். இறைவன் பெயர், திருஆப்புடையார். இறைவி, குரவங்கமழ் குழலி. சம்பந்தர்  பாடிய இத்தலத்திற்கு வந்தால், வாத நோய்கள் குணமாவதாகச் சொல்லப்படுகிறது. 

சிவனுக்கு துளசி பூசை!

சிவகங்கை, திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை சமேத திருநோக்கிய அழகியநாதர் ஆலயம் உள்ளது. தனது குறைகளை போக்க வேண்டி இறைவி   இத்தலத்தில் துளசி தளங்களால் ஈசனை வழிபட்டாளாம். அதனால் திங்கட்கிழமைகளில் இத்தல ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை நடைபெறுகிறது. மணப்பேறு கிட்டவும்   பிரிந்த தம்பதியர் மீண்டும் சேரவும் இத்தலத்திற்கு வந்து தரிசித்து பயனடைகின்றனர். இங்கு பிரதோஷ காலங்களில் மட்டும் இரு மரகத லிங்கங்கள் வெளியே   எடுக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. 

வராஹ முகத்துடன் ஆஞ்சநேயர்!

அனுமன் ஆலயங்களில் வானர முகத்துடன் ஆஞ்சநேயராக அருள் பாலிப்பதுதான் வழக்கம். ஆனால், சேலம் மாவட்டம் ஆத்தூரில், 850 ஆண்டுகள் பழமை   வாய்ந்த ஆலயத்தில் குபேர திசையான வடக்கு திசை நோக்கி வராக முகத்துடன் அவர் எழுந்தருளியிருக்கிறார். வைணவ ஆலயத்தில் பரிவார மூர்த்தியாக விளங்கும்   அனுமன் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகத் திகழ்வதும் கூடுதல் சிறப்பு.

Thursday 24 January 2013

பழனி நவபாஷாண சிலைக்கு ஒரு முன்னோட்டம்!


கொல்லிமலையில் அமைந்துள்ள பேளுக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள கூவ மலையில் தண்டயுதபாணியாக முருகன் குடி கொண்டுள்ளார்.  இந்த கோவில் சிலையை போகர் சித்தர் பழனியில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கும் முன் ஒரு முன்னோட்டமாக தயாரித்து இங்கே பிரதிஷ்டை செய்தார் என்று செவி வழி செய்திகள் கூறுகிறது.  கூவ மலையை கூர்ந்து கவனித்தால் ஒரு பாறையை கூட பார்க்க முடியாது.  ஏதோ புற்களால் கம்பளம் நெய்து மலை மேல் விரித்தார் போல் ஒரு பசுமை சூழ்ந்து நிற்கும்.  இந்த மலையின் பின் புறம் கொல்லிமலை கைலாசத்தை நினைவு படுத்தி எல்லாமே இங்கு அடக்கம் என்று சொல்லாமல் சொல்லி உயர்ந்து நிற்கும்.  இங்கு முருகர் வேட்டுவ கோலத்தில் காட்சி தருகிறார்.  நிறையவே ரகசியங்களை உள்ளடக்கிய கோவில்.  அகத்தியர் சித்தர் முதல் அனைவரும் காலை வேலையில் உலக நன்மைக்காக தவமிருக்கும் கோவில் என கூறப்படுகிறது.    அத்தனை அமைதி பொருந்திய கோவில்.

சென்று தரிசனம் செய்து அவன் அருள் பெற்று வாருங்களேன்!

Saturday 19 January 2013

நவக்ரகங்களை உள்ளடக்கிய பிள்ளையார்!

கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோயிலில் நவக்கிரக விநாயகர் அருள்கிறார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் நவக்கிரகங்களைச் சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.